ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகல் – முழுவதுமாக PDF வடிவில்

April 27, 2015

கீழே உள்ள இணைப்பில் சொடுக்குக:

ஜெ.ஊழல் வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முழுவதுமாக PDF வடிவில்

SC judgement Bavanisingh 3 member bench

———————————————————————–

“+ பவானி சிங் நியமனம் செல்லாது.

+ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவில் மறுவிசாரனை கிடையாது.

+ நாளையே அன்பழகனும், கர்நாடக அரசும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்பிக்கவேண்டும்.

+ தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

+ பவானி சிங்கின் வாதங்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது.

+ உயர்நீதிமன்றம் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வமான வாதங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.”

SC judgement Bavanisingh 3 member bench


ஜெயலலிதா மீது பாமகவின் ஊழல் பட்டியல்

February 23, 2015

Currpt3a

பாட்டாளி மக்கள் கட்சி ஆளுனரிடம் அளித்த புகார் பின்வருமாறு.

அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி தமிழக ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் சுருக்கம்

அய்யா வணக்கம்!

பொருள்: தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, ஊழல் செய்தது தொடர்பான குற்றச்சாற்றுகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டுதல் மற்றும் விசாரணை ஆணையம் அமைக்கக் கோருதல் – தொடர்பாக…

உலகம் முழுவதுமே ஊழல் ஒரு பெரும் தீமையாக பார்க்கப்படுகிறது. ஊழல் என்பது சமூகங்களை சீரழிக்கக்கூடிய, பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய, ஜனநாயகத்தின் மாண்பையும், பொதுமக்களின் நலனையும் பாதிக்கக்கூடிய பிரச்சினையாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மக்களிடையே கடுமையான வெறுப்பும், கோபமும் நிலவும் போதிலும், ஊழல்வாதிகளுடன் அரசுகளும் இணைந்து செயல்படுவதால், இந்தக் கொடுமையை சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஊழலும், முறைகேடான நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்படுகின்றன. நல்லாட்சி நடைமுறைகளை கடைபிடிக்கும் மாநிலத்திலும், சமூகத்திலும் வாழ்வது அடிப்படை மனித உரிமை என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலம் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பின் அடிப்படையில் நிர்வகிக்கப்படாமல், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் மிக முக்கியமான பணியை மாநில ஆளுனருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தி தொடரச் செய்வதற்கும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசு நிர்வாகத்தின் தூய்மை மிகவும் அவசியமாகும். அரசு நிர்வாகத்தில் தூய்மையை உறுதி செய்வதற்கான முக்கியத் தேவை ஊழலற்ற செயல்பாடுகள் ஆகும். வாழ்வதற்கான உரிமை, கண்ணியம் மற்றும் பிற முக்கிய மனித உரிமைகளும், மாண்புகளும் ஊழலற்ற ஆட்சியை பெறுவதற்கான உரிமையை சார்ந்தே உள்ளன.

அ.இ.அ.தி.மு.க.வின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியமைத்துடன், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பின், வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கியது.

ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார். ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுகளில்அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது அவர்களின் ஊழல் நிறந்த செயல்பாடுகளை காட்டும். செல்லுபடியாகக் கூடிய ஆதாரங்களுடன் கீழ்க் கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறோம்.

Currpt2a

அ) இயற்கை வளங்கள் கொள்ளை:

குற்றச்சாற்று 1 : கிரானைட் ஊழல்

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த இ.ஆ.ப. அதிகாரி உ. சகாயம் அவர்கள் கடந்த 19.5.2012 அன்று தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இமாலய ஊழலுக்கான வளங்களில் ஒன்றாக கிரானைட் குவாரிகள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. சகாயம் அவர்கள் அப்போது அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப் பாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் ஆகியவை கிரானைட் தொழிலில் செல்வாக்கு மிக்க சிலரால் வளைக்கப்பட்டு, அவற்றில் இருந்த கிரானைட் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு அதிக வருவாயை ஈட்டும் வகையில் இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளையைத் தடுக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். முதல்கட்ட ஆதாரங்களின்படி, கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ரூ.16,388 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து மேலும் விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி, விசாரணை நடத்த தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் மட்டும் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த விசாரணையின்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சமணர் படுக்கை மலைகள், பாண்டவர் மலைகள் உள்ளிட்ட மலைகளில் விதிகளை மீறி கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாவடட்டத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்பதாலும், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருமளவில் கிரானைட் கொள்ளை நடைபெற்றிருப்பதாலும். இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 5 லட்சம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.

குற்றச்சாற்று 2 : சட்டவிரோத தாதுமணல் கொள்ளை

ஊழல் தொடர்பான வழக்கில் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரி ஊழல் தான்’’ என்று எச்சரித்திருந்தது. உச்சநீதிமன்றத்தால் எதிரி என்று எச்சரிக்கப்பட்ட ஊழல், தமிழக அரசு நிர்வாகத்தில் ஆழமாக ஊடுருவி தலைவிரித்தாடி வருவதாகத் தெரிகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மோனோசைட் என்ற தாதுவை வெட்டியெடுப்பதற்கு அனுமதி அளிக்கும் அளவுக்கு, தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் ஊழல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மோனோசைட் என்பது அணுசக்தியை உள்ளடக்கிய தாது ஆகும். இதிலிருந்து தோரியம், யுரேனியம் போன்ற தாதுக்களை பிரித்தெடுக்க முடியும். இந்த தாது இயல்பாகவே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள கடற்கரை மணலில் பெருமளவில் காணப்படுகறது. இந்த தாதுவைக் கொண்ட மணல் கடற்கரை மணல் அல்லது தாதுமணல் என்று அழைக்கப்படுகிறது. இது பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட தாது ஆகும். இதுவிர இல்மனைட், கார்னெட், ரூட்டைல், சிலிமனைட், ஜிர்கான் உள்ளிட்ட தாதுக்களும் கடற்கரை மணலில் அளவுக்கு அதிகமாக காணப்படுகின்றன.

தாது மணல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 1998 ஆம் ஆண்டு வரை இதை தோண்டியெடுக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. தாது மணலை வெட்டியெடுக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு விதிகள் திருத்தப்பட்டு, கார்னெட், இல்மனைட், ரூட்டைல் ஆகியவற்றை கடுமையான விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களும் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்படடது. எனினும், மோனோசைட் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தாதுவாகவே இருந்து வந்தது. மோனோசைட் தாதுவை கையாளவேண்டுமானால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து உரிமம் பெறவேண்டும் என்று 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெட்டியெடுக்கப்பட்ட தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட் தாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள அணு தாது வாரியத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும். 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, தாதுமணலை வெட்டியெடுப்பதற்கான உரிமங்களை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசுக்கு இல்லை.

ஆனால், இந்தச் சட்டங்களை மதிக்காமல், கடந்த 2012&13 ஆம் ஆண்டில் மோனோசைட் கலந்த தாது மணலை வெட்டியெடுப்பதற்கான 16 உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கியுள்ளது. அணுசக்தி எரிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகக் கருதப்படும் மோனோசைட்டைக் கொண்ட தாது மணலை விருப்பம்போல வெட்டியெடுப்பதற்கான உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விதிகளை மீறி வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒரு டன் மோனோசைட்டை எடுப்பதற்கான உரிமத் தொகையாக வெறும் 125 ரூபாயை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மோனோசைட் தாதுவை உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்க மறைமுகமாக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தை மீறிய செயல் என்பது மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்புக்கும் பெறும் அச்சுறுத்தலாகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் இயற்கை கொடுத்த கொடையான தாதுமணல் ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தியாவில் கார்னெட் மணல் அள்ளுவதற்காக வழங்கப்பட்ட 111 உரிமங்களில் 96 உரிமங்கள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர இல்மனைட் எனப்படும் தாது மணலை அள்ளுவதற்கான 44 உரிமங்களும் இந்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டிருக்கின்றன. உரிமம் பெற்ற இடங்களை விட பலமடங்கு இடங்களில் தாது மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. கடந்த 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 2.1 மில்லியன் டன் எடையுள்ள மோனோசைட் அல்லது 2.35 லட்சம் டன் தோரியத்தை கடற்கரைகளில் இருந்து தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கின்றன. இதன் மதிப்பு அளவிட முடியாத அளவுக்கு அதிகம் என்ற போதிலும், மிகக்குறைவாக வைத்துக் கொண்டாலும் ரூ.60 லட்சம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலேயே உள்ளன. இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணு தாதுக்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான இயக்குநரகத்தின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 10.7 மில்லியன் டன் அளவுக்கு மோனோசைட் தாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இதே இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 12.8 மில்லியன் டன் மோனோசைட் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 2.1 மில்லியன் டன் மோனோசைட் அல்லது 2,35,000 டன் தோரியம் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அ) இந்தியா முழுவதற்கும் தோரியம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 700 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

ஆ) உலகில் இப்போது எந்த அளவுக்கு அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தால் தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்த தோரியத்தைக் கொண்டு 23,500 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இ) தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் தோரியத்தில் 75% வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ.45 லட்சம் கோடி ஆகும்.

* வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இந்த அளவுக்கு கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் போதிலும், அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து அரசிடம் புகார் அளித்த அடுத்த நாளே (06.08.2013) அம்மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் இரு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 17.09.2013 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தாது மணல் கொள்ளை குறித்து திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அந்த அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அடுத்த இரு வாரங்களில் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 29.05.2014 அன்று தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், இன்றுவரை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் உள்ள 71 தாதுமணல் குவாரிகளில் ககன்தீப்சிங் பேடி குழு ஆய்வு நடத்தி ஓராண்டு ஆகியும் அது குறித்த அறிக்கையை குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்து வருகிறது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் தலைவரான வி.வைகுண்ட ராஜன் அ.தி.மு.க. தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருப்பதாலும், தாதுமணல் கொள்ளை மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பகுதி ஆட்சியாளர்களுக்கு செல்வதாலும் தான் இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தாதுமணல் குவாரிகளை மூட கடந்த 17.9.2013 அன்று மாநில அரசு ஆணையிட்டது. ஆனால், அதன் பின் 30.5.2014 வரையிலான 9 மாதங்களில் வி.வி. மினரல்-ஸ் நிறுவனம் 4.45 டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு அனுமதித்திருப்பதாகவும், இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க ஆணையிட வேண்டும் என்று கோரி ஜி.விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்ய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாற்று 3: ஆற்றுமணல் ஊழல்

தாதுமணல் அளவுக்கு ஆற்று மணலை வெட்டியெடுப்பதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில்,, தமிழக அரசும் குற்றவாளிதான். மணல் வெட்டியெடுப்பதற்கான உரிமம் பெற்றிருந்த தொழிலதிபர்கள் கோவை ஆறுமுகசாமி, கரூர் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் மணல் விற்பனையில் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாயை தங்களுடையதாக்கிக் கொள்வதற்காக, அனைத்து வகையான சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. மணல் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், சுமார் 188 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய ஆறுகளிலும், விதிகளை மீறி, 20 அடி ஆழம் வரை வெட்டியெடுக்கப்பட்ட மணல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. மணல் கடத்தை தடுக்கும் நோக்குடன், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் செயல்படுத்த வில்லை. அதுமட்டுமின்றி, மணல் கடத்தலுக்கு தடையாக இருந்த அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்படுவதை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்டும் காணாமலும் இருந்தனர்.

ஆ) மின்துறை ஊழல்:

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெற்ற துறைகளில் மின்துறையும் ஒன்று. 2011 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மின்துறைக்கு புத்துயிர் ஊட்டவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் தரமான மின்சாரத்தை தடையின்றி வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. இதனால், தமிழகத்தில் காணப்படும் கடுமையான மின்வெட்டால் தொழில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம், ஊழலும், நிர்வாக குறைபாடுகளும்தான் என்பதை கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் விளக்கும். மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல் செய்வதற்காக, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டே மின்தட்டுப்பாட்டை உருவாக்கினார்கள்.

குற்றச்சாற்று 4: மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையில்லாத தாமதம்

தமிழ்நாட்டில் மின்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள் தேவையில்லாத தாமதங்களை ஏற்படுத்தின. உதாரணமாக, வடசென்னை அனல்மின் நிலையத் திட்டத்தின் முதல் அலகை செயல்படுத்துவதில் 29 மாதங்கள் தாமதம் ஆனது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு 944.767 கோடி யூனிட். வடசென்னை அனல்மின் நிலையத் திட்டத்தின் இரண்டாம் அலகை செயல்படுத்துவதில் 22 மாதங்களும், மேட்டூர் அனல் மின் திட்டத்தை செயல்படுத்துவதில் 24 மாதங்களும் தாமதம் ஆனது. இதனால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு முறையே 663.321 கோடி, 647.631 கோடி யூனிட்டுகள் ஆகும். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 4510 கோடி ஆகும்.

குற்றச்சாற்று 5: ஒப்பந்ததாரர்களிடமிருந்து தாமதத்திற்கான அபராதம் வசூலிக்கப்படவில்லை

வடசென்னை அனல் மின்திட்டங்களுக்கான ஒப்பந்தம் பெல் நிறுவனத்திற்கும், மேட்டூர் அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஒப்பந்தங்களின் படி மேட்டூர் மின்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதத்திற்காக மாதத்திற்கு ரூ.107 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். மேட்டூர் மின்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்காக முதல் 4 மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் திட்ட மதிப்பான ரூ.3114.71 கோடியில் 0.5 விழுக்காடு வீதமும், 5 மற்றும் 6 ஆவது மாதங்களில் ஒவ்வொரு வாரமும் 0.75% வீதமும், அதன் பின்னர் திட்டப்பணிகள் முடிவடையும் வரை ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு விழுக்காடு வீதமும் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் ரூ.7418. 07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அவ்வாறு வசூலிக்கப்பட வில்லை என்றும் இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. (ஆதாரம்: 2012&13 ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கை, பக்கம்: 35&37 மற்றும் 101). தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து மின்திட்டங்களும் பல ஆண்டுகள் தாமதமாகத் தான் செயல்படுத்தப்படுகின்றன. அந்த மின்திட்டங்களை செயல்படுத்தியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதத் தொகை மட்டும் சுமார் ரூ.10,000 கோடி இருக்கும்.

குற்றச்சாற்று 6: 3,600 மெகாவாட் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்

தமிழ்நாட்டில் 3,600 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் திட்டங்களை செயல்படுத்துவதில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவதாகவும் இதனால், மின் திட்டச் செலவுகள் அதிகரித்திருப்பதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்தம் 7,808 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட மின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்குக்கூட அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 112 மெகாவாட் திறன்கொண்ட நீர் மற்றும் எரிவாயு மின் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாற்று 7: மின்சார கொள்முதலில் ஊழல்

தமிழ்நாடு மின்சார வாரியம் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், தனியாரிடமிருந்து அதிக விலை குறித்து மின்சாரத்தை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. என்.எல்.சி., கல்பாக்கம் அனல்மின் நிலையம், தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்ட மத்திய அரசு மின் நிறுவனங்களிடமிருந்து மின்சார வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.94 முதல் ரூ.3.85 வரை விலை கொடுத்து வாங்குகிறது. பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து, ஒரு யூனிட் 4.26 முதல் 4.76 வரை விலைகொடுத்து வாங்குகிறது. ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளைபெருமாள்நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்; ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பவை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளாகும். இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இ). பிற ஊழல்கள்

குற்றச்சாற்று 8: கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்

அண்மையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஊழல்தான் காரணம் என்றும், இந்தக் கட்டடத்தைக் கட்டியவர் அப்போதைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சரின் பினாமி என்று கூறப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதற்காக, பெருமளவில் கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்காக குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு தர வேண்டியிருக்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி பெறும்போது, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கையூட்டு பெறப்படுகிறது. இந்த வகையில் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 36,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாற்று 9: பொது விநியோகத்திற்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல்

தமிழ்நாடு அரசின் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வினியோகிப்பதற்கான உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அடுத்த ஓராண்டுக்கு தலா ஒரு லட்சம் டன் துவரம் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு எந்த நேரத்திலும் ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளது. ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கும் ஒரு டன் உளுந்தம் பருப்புக்கு ரூ. 89 ஆயிரமும், ஒரு டன் துவரம் (மசூர்& சீமீறீறீஷீஷ் லிமீஸீtவீறீs) பருப்புக்கு ரூ. 75 ஆயிரமும் விலையாக தரப்படவிருக்கிறது. ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.730 கோடி இழப்பு ஏற்படும்.

குற்றச்சாற்று 10: முட்டை ஊழல்

தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்திற்கான முட்டைகளை கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஒரு முட்டை ரூ. 4.51 என்ற விலையில் ஓராண்டுக்கு முட்டைகளை வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் நாமக்கல்லைச் சேர்ந்த நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் பகுதியில் முட்டை கொள்முதல் செய்வதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3.31 என்ற விலையைவிட, 1 ரூபாய் 20 பைசா அதிகமாகும். ஒரு மாதத்திற்கு 8.55 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதற்கு அதிக விலை கொடுப்பதால், மாதத்திற்கு ரூ.12.31 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

குற்றச்சாற்று 11: ஆவின் பால் ஊழல்

ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆவின் பாலிலும் கலப்படம் நடைபெற்றிருக்கிறது. விழுப்புரம் அருகே ஆவின் பாலை ஏற்றி வந்த லாரியிலிருந்து 2 ஆயிரம் லிட்டர் பாலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஊழலில் முக்கியப்பங்கு வகித்த பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப் பட்டார். தமிழ்நாடு முழுவதும் 104 லாரிகளில் தலா 2 ஆயிரம் லிட்டர் வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் கொள்ளையடிக்கப்பட்டு அதற்குப் பிறகு தண்ணீர் கலக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், ரூ. 2.89 லட்சம் அளவுக்கு மட்டுமே ஆவின் பால் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி இந்த ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயன்று வருகிறது.

குற்றச்சாற்று 12: ஒப்பந்தங்கள் ஊழல்

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சர்கள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைத்து மட்டங்களிலும் சதவீதக் கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த 3 துறைகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் ஒப்பந்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகை லஞ்சமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.

குற்றச்சாற்று 13: போக்குவரத்துத் துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ. 3 முதல் 4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது.போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

குற்றச்சாற்று 14: கோகோ கோலா ஆலைக்கு அனுமதி ஊழல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் கோகோ கோலா ஆலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பல கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குற்றச்சாற்று 15: கல்வித்துறை நியமனத்தில் ஊழல்

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்க வில்லை.பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இ¬ணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.

குற்றச்சாற்று 16: பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்புடன் கூடிய பசுமை வீடுகளும், இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின்படியான வீடுகளும் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 2.40 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகளிடமிருந்து ரூ.900 கோடி கையூட்டாக பெறப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டத்தின் 4 லட்சம் பயனாளிகளிடம் ரூ.1,000 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாற்று 17: மது விற்பனையில் ஊழல்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் மூலம் சில்லறையில் மது விற்பனை செய்வதே மிகப்பெரிய ஊழல் ஆகும். ஏனெனில், மது விற்பனை ஏழைகளின் வருமானத்தை கொள்ளையடிக்கிறது; தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது; குடும்பங்களைச் சீரழிக்கிறது; பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மது வகைகளில் பெரும்பாலானவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மது ஆலையிலிருந்து (மிடாஸ்) கொள்முதல் செய்யப்படுவது மிகப்பெரிய ஊழல் ஆகும். மதுவிற்பனை மூலம் இந்த ஆலை ஈட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வருமானம் கருப்புப் பணமாக பதுக்கப்படுவதுடன், தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

குற்றச்சாற்று 18: ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நிழல் அரசாங்கம்

தமிழ்நாடு அரசு ஜனநாயக பரவலாக்கல், நிர்வாகத்திறமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களும் மக்கள் முதல்வர் என்றழைக்கப்படும் நிழல் அதிகார மையத்திடம் குவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் அவலம் நடைபெறுகிறது. இந்த நிழல் அரசுக்கு உதவ ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகக் கூட்டாளிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து செயல்படுகிறார்கள். அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊழல் இலக்குகளை இக்குழு தான் தீர்மானிக்கிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் அவர்கள் வசூலித்துத் தரும் லஞ்சப் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேதகு ஆளுனர் அவர்களே!

இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் பொது ஊழியரால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒப்பானவையாகும். பொது ஊழியர்களாக இருப்பவர்கள், பணப்பயன் அடையும் நோக்குடன் தங்களின் பதவியை பயன்படுத்தி செய்யும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமும், 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டமும் தெளிவாக வரையரை செய்திருக்கின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் தமது அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரையின்படி ஏராளமான பணிகளையும், கடமைகளையும் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் அமைச்சரவையின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற போதிலும், சில நேரங்களில் அவர் தமது அதிகாரத்தை அவரது விருப்பப்படி செயல்படுத்த முடியும். இத்தகைய அதிகாரத்தை ஆளுனருக்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளில் 167(பி) முக்கியமானதாகும். அந்த சட்டத்தின்படி,‘‘ ஒரு மாநிலத்தின் ஆளுனர் கோரும்போது மாநில அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், புதிய சட்டம் தொடர்பான திட்டங்களையும் ஆளுனரிடம் வழங்க வேண்டியது அம்மாநில முதலமைச்சரின் கடமை ஆகும்’’.

அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)-ன் முதல் பகுதியில் அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களில் அவர் சுதந்திரமாக செயல்பட இந்த சட்டத்தின் பின்பகுதி அதிகாரம் அளிக்கிறது. அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்படுவது சாத்தியமில்லாத விஷயங்களில் ஆளுனர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியும் . ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 11 ஆகிய பிரிவுகளின்படி அதிகாரத்தில் உள்ள பொது ஊழியர் ஒருவர் மற்றவர்களுக்கு சலுகை காட்டுவதற்காக பணப்பயன் அல்லது பரிசுகள் பெற்றால் அது ஊழலாக கருதப்படும்; இதற்காக அவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படலாம்.

மேதகு ஆளுனர் அவர்களே…!

மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி உங்களின் பரிசீலனைக்காக நாங்கள் இந்த மனுவை வழங்குகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட குற்றச்சாற்றுகள் குறித்து, பொதுநலனைக் காக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை கோருவீர்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சர் சார்பில் அளிக்கப்படும் விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லாவிட்டால், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் உண்மைத் தன்மை குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


ஜெயலலிதா மீதான வழக்கில் நீதிபதி குன்காவின் தீர்ப்பு – முழுவதும் இதோ!

October 2, 2014

Jayalalithaa assets case judgement – Judge John Michael D’Cunha – Full version

தனது 1991- 96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 27.09.2014 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

அந்த தீர்ப்பினை முழு வடிவில், 1136 பக்கதையும் காண, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்: 

Jayalalithaa_assets_corruption_case_judgement_John_Michael_DCunha_Full_version